வெட்கி தலைகுனிகிறேன் என்னை நினைத்து.
ஒரு தனி மனிதனின் உணர்ச்சிகள் "வெடித்ததன்" விளைவாய் ஒரு தேசத்தின் தலையெழுத்தே மாறுகிறது எகிப்தில்.
இங்கே முத்துகுமாரின் மரணத்துக்கு விடை தேட முடியாமல்
இன்னும் நான் மிஷ்கின் "எதை" களவாடிருப்பார் என்று தேடுகிறேன்.
தினம் ஒருவனாய் சாகும் என் மீனவனின் வாழ்வாதாரத்தை நிலைபடுத்த முடியாமல்
இன்னும் நான் என் ரசனையை ஆடுகளத்தின் "யாத்தே"வில் நிலைபடுத்தி லயிக்கிறேன்.
"யார் ஆட்சியில் எத்தனை மீனவர்கள் இறந்தார்கள்?" என்று கணக்கு சொல்லி மார்தட்டி கொள்ளும் பிணம்தின்னி கழுகுகளின் கொட்டத்தை அடக்க முடியாமல்
யார் யாரோடு கூட்டு சேர்வார் என்று என் தீர்க்கதரிசன திறமையை பரிசோதித்து கொள்கிறேன்.
கோடிகளாய் ஊழல்கள்.
அடுத்து யாரை கைது செய்வார்கள் என்று நகம் கடித்து பார்க்கிறேன் ஒரு திரைப்படத்தை பார்க்கும் ஆவலோடு.
வீதிக்கொரு சிலை திறக்கும் மாநிலம் என் தேசத்தில் இருக்கிறது
செருப்பு துடைத்து விட அதிகாரிகள் இருக்கிறார்கள்.
அதையும் சாதிமயமாக்க,பெண்ணியமாக்க என் நண்பர்கள் இருக்கிறார்கள்.
செத்த பிணத்தை கரைக்கு கொணர கடற்படை இருக்கிறது.
உயிர் இருந்தும் பிணமாய் அலையும் தலைவர்களை தட்டி கேட்க நான் படை அமைக்கவில்லை.
அடிப்படை வாழ்வுக்கு உயிரையும் மானத்தையும் விலைக்கு விற்கும் நிலைமை எனக்கு.
ஆயினும் விலை இல்லாமல் வாங்கிய வண்ணதொலைக்காட்சி உவகை அளிக்கிறது.
ஒரு முகமது தீ குளித்தான்..
அந்த தேசத்தின் தலைவன் பதவி இழக்கிறான்..
ஒரு முத்துகுமார் இறந்தான்..
உடலை சொந்தம் கொண்டாட உள்ளடி அரசியல் நடந்தது..
மல்லாந்து படுத்து காறி உமிழ்ந்து கொள்கிறேன்...
எப்பொழுது உணர்வேன்? அந்த நெருப்பின் சூட்டை..
சுயவிடுதலை செய்துகொண்ட எகிப்து மக்கள் உணர்ந்த அந்த தீக்குளிப்பின் சூட்டை..
எப்பொழுது உணர்வேன்? அந்த எழுச்சியை..
பினந்தின்னிகளிடமிருந்து விடுபட..
முடிவுறா கேள்விகள் மூளையை தின்ன...
விடை காண முயல்கிறேன் மானாட மயிலாடவில்.........
- லகுடபாண்டி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக